திருப்பதியில் புதிதாக திறக்கப்பட்ட கவுன்டரில் ரூ10 ஆயிரம் நன்கொடை செலுத்தும் பக்தர்கள் ஏழுமலையானை அருகில் சென்று தரிசிக்கலாம்

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு பழுதடைந்த கோயில்கள் புதுப்பிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு ரூ10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு விஐபி தரிசனத்தில் செல்வதற்கான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பக்தரிடம் ரூ500 பெறப்பட்டு அவர் விரும்பும் நாளில் தரிசிக்க விஐபி பிரேக் டிக்கெட் தரப்படுகிறது. அதன்மூலம் சுவாமியின் கருவறை அருகே அதாவது குலசேகரபடி (மூலவர் சிலைக்கு 10 அடி தொலைவில் நின்று) பகுதியில் நின்று தரிசிக்கலாம்.

இதுவரை ஆன்லைனில் மட்டுமே பக்தர்கள் ரூ10 ஆயிரம் நன்கொடை வழங்கி ரூ500 தரிசன டிக்கெட் பெற்று சுவாமியை தரிசித்து வந்தனர். இதனை நேரடியாக திருப்பதியில் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டது. இதற்காக திருப்பதி மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் புதிய கவுன்டர் நேற்று திறக்கப்பட்டது. இதனை தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதற்கு ஒரு பக்தர் ரூ10 ஆயிரம் நன்கொடை வழங்கினால், அவரை கவுரவிக்கும் வகையில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சுவாமியை அருகில் சென்று தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதற்காக அவரிடம் இருந்து ரூ500 கட்டணம் பெறப்படுகிறது. இதுவரை இந்த வசதி ஆன்லைனில் மட்டுமே இருந்தது. இந்த டிக்கெட்டை நேரடியாக வழங்க முடிவு செய்து தனியாக கவுன்டர் திறந்துள்ளோம். எனவே பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் வந்து கவுன்டரில் டிக்கெட் பெற்று திருப்பதியில் தங்கி குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ300 கோடி நன்ெகாடை கிடைத்துள்ளது. இந்த நிதியை கொண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் மதமாற்றம் நடக்கும் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலும் 502 கோயில் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1500 கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.