மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிமன்யு பிஸ்வாஸ். இவரது மகன் கிருஷ்ணா ஆனந்த் பிஸ்வாஸ் (48). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாணிக்காபுரம் சாலையில், கடந்த 5 வருடங்களாக ஒரே இடத்தில் 2 பெயர்களில் 2 கிளீனிக் வைத்து மூல நோய்க்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் நாட்டு வைத்தியம் அளிப்பதாக கூறி பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆங்கில மருத்துவம் எதுவும் படிக்காமல் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையில் அந்த தனியார் கிளீனிக்கிற்கு மருத்துவக் குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் மருத்துவம் படித்ததற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.
இதையடுத்து 2 கிளீனிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் கிருஷ்ணா ஆனந்த் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.