நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு மின் தூக்கியின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மின் தூக்கியின் இயக்கம் தடைபட்டது. இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உடன் வந்த அதிகாரிகள் அனைவரும் மின் தூக்கியில் சிக்கி கொண்டனர்.
இதையறிந்த ஊழியர்கள், ஆபத்து கால கதவின் வழியே, தூக்கியில் சிக்கிகொண்ட அனைவரையும் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் பத்து நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் மின்தூக்கி ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் உதவி செயற்பொறியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.