மும்பை: தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் யூடியூபரை சீண்டிய இருவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை கார் பகுதியில் நேற்றிரவு தென்கொரியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைச் சுற்றிச் சுற்றி வரும் இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை சீண்டுகிறார். தன்னுடன் வண்டியில் ஏறி வருமாறு அழைக்கிறார். அந்தப் பெண் இல்லை, இல்லை என்று மறுக்கிறார். இருந்தாலும் அந்தப் பெண்ணை அந்த நபர் தொடர்ந்து சீண்டுகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் நகர முயற்சிக்க, அந்த இளைஞர் அவர் கையை பிடித்து இழுக்கிறார். முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பெண் அங்கிருந்து வேக வேகமாக நகர்கிறார். அவர் முகத்தில் பதற்றமும் அதிர்ச்சியும் அப்பட்டமாக தெரிகிறது. அழுகையை மறைத்து நடப்பதுபோல் நகர்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்ணே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து. தான் தெரியாத நபர்களுடன் சகஜமாக பேசியிருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் மும்பை காவல் துறையை டேக் செய்தனர். வெளிநாட்டவருக்கு இதுபோன்ற சம்பவம் நேரக் கூடாது. நம் நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் மும்பை போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், இது இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நடக்கிறது. இந்தியர்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் உள்ளவர்களைப் போல் அழகானவர்கள் என்றார்.