அலைபாயுதே படம் மூலம் அறிமுகமான மாதவன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கிய அவர் இறுதிச்சுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்தார். அப்படி அவர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ராகெட்ரி என்ற படத்தை இயக்கினார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் நடிகராக படத்தில் மாதவன் அசத்திவிட்டார். அதேசமயம் இயக்குநராக அவர் மேலும் மெனக்கெட்டிருக்க வேண்டுமென பலர் வெளிப்படையாகவே கூறினார்.
மேலும் இனி படம் எதுவும் இயக்கும் ஐடியாவில் இல்லை தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகவும் மாதவனும் கூறினார். இந்தச் சூழலில் மாதவனும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்தப் படம் ஐயப்பனும் கோஷியும் ரீமேக்காக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. ஆனால் அப்படி யாரும் இதுவரை மாதவனை அணுகவில்லை எனவும், அந்தத் தகவல் வெறும் வதந்தி மட்டுமே எனவும் மாதவனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
அதேசமயம், இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்ற மாதவன் விரும்புவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்தும், விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்தும், லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2 என பிஸியாக இருப்பதாலும் மாதவனின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.