இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாலை விபத்து
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி(32) கடந்த 5ஆம் திகதி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் வாகனத்தின் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது விபத்தை ஏற்படுத்திய கார் வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது தெரிய வந்தது.
மேலும், ஷாலு பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் 1.90 கோடி ரூபாய் மகேஷ் சந்திற்கு கிடைக்க இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மகேஷ் சந்த்திடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன.
வரதட்சணை புகார்
கடந்த 2019ஆம் ஆண்டு ஷாலுவின் வரதட்சணை புகார் அடிப்படையில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய நினைத்த அவர், தனக்கும் அதன் வாயிலாக லாபம் கிடைக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
அதன்படி மனைவியின் மீது காப்பீடு திட்டம் ஒன்றை மகேஷ் செய்திருந்தார். மேலும் சம்பவத்தன்று மனைவியிடம் கோவிலுக்கு செல்லுமாறு கூறி அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையை வைத்து மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து நடந்ததாக நாடகமாடியுள்ளார்.
தன் மனைவியை கொலை செய்ய 10 லட்சம் ஒப்பந்தம் பேசிய மகேஷ் சந்த், முன்பணமாக 5.50 லட்சத்தை கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மகேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.