விழிஞ்சம்: கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கிறது விழிஞ்சம். கடற்கரைப் பகுதியான இங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் அரசு – தனியார் கூட்டமைப்பில் துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும் பங்கு முதலீட்டை அதானி குழுமம் மேற்கொள்கிறது.
இந்தத் துறைமுகத்தால் கடல் அரிப்பு ஏற்படும் என்றும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் இப்பகுதி மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் பேசுகையில், “இந்தத் துறைமுகத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும். இத்தகைய திட்டம் முடங்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை முடக்க நினைப்பது தேச விரோதம்.
கெயில் எண்ணெய் குழாய் திட்டத்தையும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அரசு அத்திட்டங்களில் உறுதியாக இருந்ததால் போராட்டங்கள் வலுவிழந்தன. அதேபோல்தான், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நிறுத்த அரசு அனுமதிக்காது” என்றார்.