மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் மளிகை பொருட்களை தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 2017 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக இலங்கை தமிழர்கள் உட்பட 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரரகளுக்கு வேஷ்டி, சேலை மற்றும் 20 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் வேஷ்டி, சேலை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் மளிகைப் பொருள் தொகுப்புடன் வழங்கப்படும் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் போன்றவை பக்கத்து மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இடைத்தரகர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பிற மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுகிறது. அரசின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. வெல்லம், வெற்றிலை உள்ளிட்ட தமிழகத்தில் கிடைக்கும் பொருட்களை தமிழக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யலாம். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படாத மளிகைப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யலாம்.
எனவே, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யாமல் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு, ”மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. நன்மை பயப்பதும் கூட. இது தொடர்பாக அரசு ஏதேனும் முடிவு எடுத்துள்ளதா?” என கேள்வி எழுப்பியது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ”மனு தொடர்பாக தமிழக கூட்டுறவுத் துறை செயலர், தமிழக வேளாண்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 7-க்கு ஒத்திவைத்தனர்.