ஐபிஎல்-லில் தனது ஓய்வு முடிவு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்ட பிராவோ

சென்னை,

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் மேற்கு இந்திய தீவை தேர்ந்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ. சென்னை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தனது பங்களிப்பை அளிப்பது மட்டுமல்லாமல், பீல்டிங்கிலும் கலக்குபவர். இவர், கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆடும் டான்ஸ்சுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உண்டு.

இப்படி தனது அனுபவத்தை ஒவ்வோரு போட்டியிலும் வெளிப்படுத்தி சென்னை அணியில் மிக முக்கியமான வீரராக திகழ்ந்துவந்த பிராவோ தற்போது ஓய்வு முடிவினை அறிவித்து உள்ளார். சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதே நேரத்தில் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது புதிய பணியை மேற்கொள்ளவுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிராவோ கூறும்போது,

மிகக் கடினமான டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று இன்று அறிவிக்கிறேன். இது ஒரு சிறந்த பயணம், நிறைய ஏற்ற தாழ்வுகளுடன் இருந்தது. அதே நேரத்தில், நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மற்றும் முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன்.

ஆனால் அதே நேரத்தில், கடந்த 15 வருடங்களாக நாம் அனைவரும் எனது வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்ஸ்டாகிராம் பதிவில் பிராவோ கூறியுள்ளார்.

பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை அணியில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் எனது அழைப்பு இப்போது உள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

61 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பிராவோ. 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்களை எடுத்துள்ளார்.

சென்னை அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். 2011, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வெற்றிகளிலும், 2014 இல் சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றியிலும் அவர் ஒரு அங்கமாக இருந்தார். ஐபிஎல் சீசனில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.