“எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்!” – நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணியால் கலங்கிய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஊர்கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், “இந்தப் பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் உள்ளிட்ட பயிர்கள் வளமாக விளையக்கூடிய விவசாய நிலத்தில் சாலை அமைக்க வேண்டாம் என்பதை தமிழக அரசுக்கு வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். கடந்த சில நாள்களாக சுமார் ஐந்து விவசாயிகள் வீதம் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம்.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், சம்பா நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் லாரி மூலம் செம்மண் கொண்டு வந்து கொட்டி ஜே.சி.பி இயந்திரம் மூலம் நிரவி வருகின்றனர். உயிருடன் இருக்கும் பயிரில் மண்ணை போட்டு மூடுவது எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்” என விவசாயிகள் கலங்கி துடித்தனர்.

இந்த மணல் கொட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடியை வயலில் நட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயி சுகுமாறன், “நல்ல விளைச்சல் தரக்கூடிய விளைநிலங்களில் சாலை அமைப்பதற்கு ஆரம்பம் முதலே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனாலும் வயலுக்குள் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டின. கடந்த நவ.6-ம் தேதி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புறவழிச்சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.

நெல் வயல்

அதன் பின்னரும், திருவையாறில் புறவழிச்சாலை அமைப்பதால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாகவும் தெரிவித்தோம். இந்த நிலையில் அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருக்கிறது. 60 நாள்களான நெற்பயிரில் சாலை அமைப்பதற்காக செம்மண்ணைக் கொட்டி ஜே.சி.பி மூலம் நிரவி வருகின்றனர்.

கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணைக் கொட்டி சமன் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வயல்களில் கறுப்பு கொடியை நட்டு வைத்தோம். அத்துடன் மண்ணை நிரவி கொண்டிருந்த ஜே.சி.பி இயந்திரத்தை தடுத்து நிறுத்த முற்பட்டோம். இதையடுத்து விவசாயிகளின் வலிகளை புரிந்து கொள்ளாத திருவையாறு டி.எஸ்.பி ராஜ்மோகன், விவசாயிகளை ஒருமையில் பேசினார்.

விளைந்த வயலில் சாலை பணி

எங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீஸூம் வழங்கவில்லை. அதற்கான இழப்பீடு தொகையையும் கொடுக்கவில்லை என்றதை காதில் வாங்காமல், விவசாயிகளை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக செயல்பட்டார். இன்னும் 30 நாள்களில் கதிர் வரக்கூடிய நெற்பயிரை மண்ணை போட்டு மூடுவது விவசாயிகளான எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்.

பாடுபட்டு விளைவித்து அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நெற்பயிரில் எங்கள் கண் முன்னேயே மண்ணை போட்டு மூடியதை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. திருவையாறிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும், புதிய புறவழிச்சலை அமைப்பதற்கான தேவையே இருக்காது. உடனடியாக பணியை நிறுத்தி பயிரையும், விவசாயிகளையும் அரசு காக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.