திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியரை ஆபாசமாக திட்டி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (52) என்பவர் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் ராமலிங்கம் பணியில் இருந்த போது, திருத்தணியை சேர்ந்த வடிவேல் (47) என்பவர் ஒரு பேருந்து கூட வரவில்லை என்று ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி உள்ளார்.
மேலும் அலுவலகத்தில் இருந்த மைக் செட்டுகளை சேதப்படுத்தியும், நாற்காலியை எடுத்து ராமலிங்கத்தையும் அடித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இராமலிங்கம் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வடிவேலுவை கைது செய்து திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு விசாரணை மேற்கொண்டதில், வடிவேல் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் வடிவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்