'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட சர்ச்சை பேச்சு : இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம்

புதுடில்லி : ''தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையோ, பாதிக்கப்பட்டவர்களையோ அவமதிப்பது என் நோக்கம் அல்ல'' என, இஸ்ரேல் திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது திரையிடல் நிகழ்வு, கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், விழா நடுவர் குழுவுக்கு தலைமை வகித்தார். இதில், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையிடப்பட்டது.

திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் நடாவ் லபிட் பேசும்போது, ''இந்த படம் பிரசாரத்தை முன்வைக்கிறது. மிக மோசமான கருத்துக்களை பேசுகிறது. ''இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற மதிப்புமிக்க அரங்கில் திரையிட தகுதியற்றது,'' என, கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனர் நடாவ் லபிட் இந்தியாவின் அழைப்பை அவமானப்படுத்திவிட்டதாக, நம் நாட்டுக்கான இஸ்ரேல் துாதர் கண்டனம் தெரிவித்தார். லபிட் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட கருத்து. இதில் இருந்து விலகியிருக்க விரும்புவதாக, நடுவர் குழுவில் இடம் பெற்ற இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நிறைவு விழா பேச்சு குறித்து இயக்குனர் நடாவ் லபிட் விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஒருவேளை என் கருத்து அப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், இதற்காக முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். அதே நேரம், அந்தப் படம் மிகவும் மோசமான கருத்துகளை பிரசாரம் செய்கிறது. திரைப்பட விழாவில் திரையிட தகுதியற்றது என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்க முடியாது.

இது, என் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. படத்தை பார்த்த பின், ஒட்டுமொத்த நடுவர் குழுவும் அதே கருத்தை தான் பிரதிபலித்தது. படத்தில் பேசப்பட்டு உள்ள அரசியல், வரலாற்று சம்பவங்கள் அல்லது உயிரிழப்புகளை குறித்து நான் பேசவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பி பிழைத்தவர்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.