சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டம் நிறுத்தமா… உண்மை நிலவரம் என்ன?!

சச்சார் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி 2006-ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான நலத்துறை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மதங்களான முஸ்லீம், கிறித்துவம், புத்தம், சீக்கியம், பார்சி, சமணம் மக்களுக்கான நலத்துறை அமைச்சகம். இதன் கீழ், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் உயர்த்தும் நோக்கில் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும். சிறுபான்மை பள்ளி மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து, பள்ளி இடைநிற்றலைத் தடுக்க,  `மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித்தொகை’ என்னும் திட்டத்தின் கீழ் நிதி உதவி  வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைப் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் இத்திட்டத்தின் பயனாளர்களாக இருந்தனர்.

உதவித்தொகை அறவிப்பு

இதன்படி, ஒரு லட்சத்திற்குக் கீழ் ஆண்டு வருமானம் உள்ள சிறுபான்மை குடும்ப மாணவர்களுக்கு, 1-5 ஆம் வகுப்பு பயில்வோருக்கு மாதம் ரூ.100 மற்றும் 6-10 வகுப்பு பயில்வோருக்குச் சேர்க்கை தொகை ஆண்டுக்கு ரூ.500, பயிற்சிக் கட்டணம் மாதம் ரூ.350, மேலும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவருக்கு மாதம் ரூ.600, வீட்டில் இருந்து படிக்கும் மாணவருக்கு ரூ.100 என உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

School Student (Representational Image)

இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாணவர்கள் பெறுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, இனி இந்த உதவித்தொகை  9, 10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக 1-8-ம் வகுப்பு மாணவர்கள் புதுப்பிக்க  சமர்பித்த விண்ணப்பம் அமைச்சகத்தால் நிரந்தரமாக நிராகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவி தொகை ரத்து செய்யப்பட்டிருப்பது ‘அநீதி மற்றும் குரூரம் கலந்த முடிவு’. கல்வி உரிமைச் சட்டத்தைக் காரணம் காட்டி மத்திய அரசு நடத்தி இருக்கும் கொடூர தாக்குதல். இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி அமைச்சருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர், சிறுபான்மை அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி மிகத் தெளிவான முன்னுரையைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த ஏழை அடித்தட்டு மக்கள் பொருளியல், சமூக, கல்வி தளங்களில் பின்தங்கியுள்ளனர். அதற்கு சமுதாயத்தின் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பாரபட்சங்களும் காரணம். மேலும் கல்விக் கட்டணம் தவிர்த்து பெற்றோர் தங்கள் வருமானத்திலிருந்து உணவு, போக்குவரத்து, கல்வி சுற்றுலா ஆகியவற்றுக்குச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

சு.வெங்கடேசன்

இலவச உணவு திட்டங்கள் அரசுப் பள்ளிகள் நடைமுறையில் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இல்லை. விளிம்பு நிலை சமூகத்து மாணவர்கள் மற்ற மாணவர்களோடு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்குச் சமதள ஆடுகளத்தை இந்தச் சமூகம் தரவில்லை என்பதே உண்மை. இதற்கு ஆதரவு தருவது அரசின் பொறுப்பின் ஒரு பகுதி. எனவே, உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆதார நடுநிலைக் கல்வி முழுமைக்கும் கல்வி உதவித்தொகையைத் திட்டத்தைத் தொடர்வதை உறுதி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “வெறும் ஒரு சுற்றறிக்கை வைத்துக் கொண்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகப் பொய் பிரசாரத்தைக் கம்யூனிஸ்ட்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  பொறுப்பற்று செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. அதேபோல் சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்கும் சமூக விரோத செயலில் ஈடுபடுவது தவறானது.

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை ரத்து என்பது முற்றிலும் தவறானது. அரசு வலைதளத்தில் நீக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள், அவர்கள் சரியான தகவலைக் கொடுக்காததால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே மாணவர்கள் தரப்பில் குழப்பத்தை உண்டாக்க முயற்சி செய்வது, அதில் அரசியல் செய்வதற்கே. அதேபோல், முதலில் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தான் நிதி கொடுக்கப்படும். ஆனால், தற்போது நேரடியாக பெற்றோர்கள் கணக்கில் போடப்படுகிறது. இதனால், இவர்களால் கமிஷன் எடுக்க முடியவில்லை என இப்படி பொய் குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள்” என்றார்.

நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயற்குழு உறுப்பினரான கனகராஜன் பேசியதாவது, ”தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கியதால், இலவச பஸ் பாஸ் சேவையை நிறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்தார். ஆனால் அதன் விளைவாக அடுத்த ஆண்டே சேர்க்கை விகிதம் குறைந்தது. மேலும், இடைநிற்றலும் அதிகமானது. எனவே, கல்வி உரிமைச்சட்டம் கீழ் இலவசமாக கல்வி மற்றும் கட்டாய கல்வி தருவதன் காரணமாக உதவித் தொகை நிறுத்துவது இதுபோன்ற பின்விளைவுகளை  ஏற்படுத்தும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவருக்கு இலவசப் புத்தகம் கிடைக்கும். ஆனால் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பதை இவர்கள் யோசிக்கவில்லை. இதனால் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரில் தங்கிப் படிக்க எண்ணும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இனி வரும் காலங்களிலும் சிறுபான்மையருக்கான எஞ்சிய நலத் திட்டங்களை முற்றிலும் கைவிடுவதே இவர்களின் நோக்கம். இதற்கு எடுத்துக்காட்டாக தான், சிறுபான்மையின பெண் மாணவிகளுக்கு ‘அப்துல் கலாம் ஆசாத்’ என்னும் உதவித்தொகைத் திட்டம் செயலில் இருந்தது. அப்போது திடீரென அதை ‘பேகம் ஹஸ்ராட் மஹால்’ என மத்திய அரசு பெயரை மாற்றி அமைத்தது. ஆனால் மாற்றப்பட்ட தகவலை வெளியிடாமல் இருந்தது .

கனகராஜ்

இதனால் பல மாணவிகள் உதவித்தொகை பெறுவதைத் தவறவிட்டனர். இவ்வாறு அறிவிப்பதில் தாமதம், குறைந்த நேரத்தில் இதற்கு விண்ணப்பிக்க சொல்வது என மாணவர்கள் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். இப்போது இதை மொத்தமாக அரசு கைவிட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு அடுத்த நகர்வு தான் இது. இதே போல், 1944-ம் ஆண்டு முதல் மெட்ரிக்கான பின் கல்வி பயிலும்  எஸ்.சி\எஸ்.டி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு 75%, மாநில் அரசு 25% நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு இந்தத் திட்டத்தை நீக்கியது. பின்பு மாநில அரசின் கோரிக்கையால் மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு 60,40 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மாநில அரசுக்குக் கூடுதல் சுமை உண்டானது.

நாடாளுமன்றம்

அதே போல, இந்த நடவடிக்கை அதிகாரத்தை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டு பொறுப்புகள் முழுவதையும் மாநில அரசுக்குத் தள்ளிவிடும் ஏற்பாடு. இதனால் மாநிலத்துக்கு அதிகாரமற்ற சூழ்நிலை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்”, என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.