சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஒமலூர் பகுதிகளில் இயங்கிவரும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், காட்டூர் காமலாபுரம் எல்லைக்குட்பட்ட நான்கு வெல்லம் ஆலைகளான ஏழுமலை கரும்பாலை, தங்கதுரை கரும்பாலை, கிருஷ்ணன் கரும்பாலை, குணசேகரன் கரும்பாலையில் இருந்து வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ அளவுள்ள சுமார் 254 சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது.
அதன்மூலம் சுமார் 12,700 கிலோ கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 4,31,800 ரூபாய் ஆகும். மேலும் ஒரு சில ஆலையிலிருந்து செயற்கை நிற மூட்டிகள் மூலம் தயாரிக்கப்பட்டிருந்த வெல்லம் சுமார் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 30,000 ரூபாய் ஆகும்.
இதன்மூலம் கைப்பற்றப்பட்ட பொருட்களை உணவு மாதிரியும் எடுப்பதற்காக உணவு பகுப்பாய்வு கூடம் கிண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் கதிரவனிடம் பேசியபோது, “வெள்ளத்தில் பொதுவாக சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் கலப்படமாக பயன்படுத்தப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் வெல்லச்சக்கரை செய்வதற்கு கெமிக்கல்கள் மற்றும் செயற்கை நிற ஊட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனை கண்டறியப்பட அனைத்து வெல்ல தயாரிப்பு ஆலைகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று உணவுப்பாதுகாப்பு துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.