சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3ஆவது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (17). இவர் வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (நவ. 29) அன்று கல்லூரி மாணவன் பிரவீன், மோட்டார் சைக்கிளை ஓட்ட அரி பின்னால் உட்கார்ந்திருந்து பயணித்துள்ளார். அவர்கள், சென்னை தரமணி 100 அடி சாலையில் அதிவேகமாக (சுமார் மணிக்கு 114 கிலோமீட்டர் வேகத்தில்) சென்றுள்ளனர். அப்போது அரி செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தரமணி சந்திப்பு அருகில் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் யூடேர்ன் செய்துள்ளது. திடீரென வந்த லோடு வேனில், மோட்டார் சைக்கிள் இடிக்காமல் இருக்க வாகனத்தை ஸ்லோ செய்த போது, கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அன்று இரவே சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி நேற்று முன்தினம் (நவ. 30) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தரமணி, கட்டபொம்மன் தெருவை சேர்ந்த லோடு வேன் டிரைவர் குணசேகரன் (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த பிரவீனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.https://zeenews.india.com/tamil/topics/accident
மேலும், சாலைகளில் இதுபோன்று அதிவேகமாக சென்று, அதனை செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்தில் பதிவிடும் அபாயமான கலாச்சாரம் தற்போது பரவி வருகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களோ, முறையான பயிற்சியும் அல்லாமல் இதுபோன்ற சாகசங்களை பிரதான சாலைகளில் நிகழ்ந்துவது, இதுபோன்று பயங்கர விபத்தில் முடிய அதிக வாய்ப்புள்ளதாகவும், இதனை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.