திருச்சி: `ஒரு லட்சம் கொடுத்துடுங்க; நிலத்தை கிரயம் செஞ்சிடலாம்!’ – சிக்கிய சார்பதிவாளர்

திருச்சி மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மிகவும் பிசியானதும், அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மிக முக்கியமான இருக்கிறது திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம். இங்கு திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அசோக்குமார் என்பவர், பத்திரப் பதிவுக்காகச் சென்றிருக்கிறார். அசோக்குமார் திருவெறும்பூரை அடுத்த பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முடிவு செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் சந்தை மதிப்பில் ஒருசதுர அடி நிலம் 290 ரூபாய் என்றிருக்க, 21 சென்ட் நிலத்தினுடைய மதிப்பு ரூ.26.50 லட்சமாக இருந்திருக்கிறது. பத்திரப்பதிவிற்கு 11 சதவிகித ஸ்டாம் கட்டணமாக கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை கட்ட வேண்டி இருந்திருக்கிறது. அதையடுத்து, அசோக்குமார் பத்திரப்பதிவு சட்டம் 47 ஏ-ன் படி நிலத்தின் மதிப்பினை ஆய்வு செய்து குறைக்கச் சொல்லி, திருவெறும்பூர் சார் பதிவாளர் பாஸ்கரனிடம் மனு கொடுத்திருக்கிறார்.

திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம்

அப்போது சார் பதிவாளர் பாஸ்கரன், 47 ஏ பிரிவின் படி மனுவினை பத்திரம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறார். அதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அளித்த ஆலோசனையின்படி சார்பதிவாளர் பாஸ்கரனை திருச்சி ஜி கார்னர் பகுதிக்கு வரவைத்து, அசோக்குமாரை ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வைத்துள்ளனர். திட்டமிட்டபடி அங்கு தயாராய் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார், சார்பதிவாளர் பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து விஷயமறிந்த அதிகாரிகளிடம் பேசினோம். “பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம் சகஜமாக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதை சார்பதிவாளர் பாஸ்கரன் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். மேலும், அவருடைய சீட்டிலேயே உட்காராமல், அவருடைய உதவியாளரை வைத்தே கையெழுத்து போடச் சொல்லி பத்திரப்பதிவுகளைச் செய்து வந்திருக்கிறார். பாஸ்கரனின் லஞ்சப் பணத்தில் அப்பார்ட்மெண்ட் என ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார். அந்த ஆவணங்களெல்லாம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

இதனிடையே திருவெறும்பூர் சார் பதிவாளரான பாஸ்கரனின் லஞ்சப் போக்கை கண்டித்து, சமீபத்தில் பத்திர எழுத்தாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து கடைசியில் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.