சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் ஒழியும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராப் இசைப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி பிராப் என்ற ரவுடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை பஞ்சாப் முதல்வர் பகவ்ந்த் மான் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விவரித்தார். அப்போது அவர், “கோல்டி பிரார் கைது செய்யப்பட்டது உண்மையான தகவல்தான். மாநில முதல்வராக நான் அதனை உறுதிப்படுத்துகிறேன். பஞ்சாப்பில் இனி கேங்க்ஸ்டர் கலாச்சாரம் முடிவுக்கு வரும். இவர்களைப் போன்றோர் வெளிநாட்டில் பதுங்கிக் கொள்கின்றனர். அதனால் முறைப்படி வெளிநாட்டு காவல் துறை உதவியை நாடியே எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.
அண்மையில் நாங்கள் உள்துறை அமைச்சகம் வழியாக இன்டர்போல் உதவியைக் கோரினோம். அவர்கள் கோல்டி பிராருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர். இப்போது அமெரிக்காவில் கோல்டி பிரார் கைது செய்யப்பட்டுள்ளார். எப்படியும் விரைவில் சட்டங்களுக்கு உட்பட்டு அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார் என்று நம்புகிறோம்” என்றார்.
இன்டர்போல் என்ற சர்வதேச போலீஸார் ஒருவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தால் அந்த நபரை 194 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த போலீஸார் அவரவர் எல்லைக்குள் கைது செய்து கொள்ளலாம். முன்னதாக, பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனடாவை சேர்ந்த ரவுடி சத்தீந்தர்ஜித் சிங் என்ற கோல்டி பிரார் அமெரிக்காவில் கலிஃபோரினியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கொலைக்கு பொறுப்பேற்ற கோல்டி: பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூஸா கிராமத்தை சேர்ந்த ராப்பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கு கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் கோல்டி பிரார், லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதால் அவர்கள் சார்ந்த குழுக்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கின் முக்கியத்துவம் கருதி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதி செய்துள்ளார். அவர் தற்போது குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளார்.