சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சாகுல் மீரான் என்பவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய போதை பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை சாகுல் மீரானுக்கு மூச்சுத் திறன் ஏற்பட்டதால் சிறை துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாகுல் மீரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று இரண்டு தினங்களுக்கு முன்பு சீனிவாசன் என்ற கைதி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். புழல் சிறையில் கடந்த இரண்டு மூன்று நாட்களில் இரண்டு கைதிகள் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.