புதுடில்லி:’மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு ஏதாவது அத்தியாவசியமான காரணம் உள்ளதா?’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நம் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட, டி.எம்.எச்., 11 என்ற கடுகை களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.
ஆர்வலர்கள் எதிர்ப்பு
இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த அனுமதியை அளித்தது. இதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதி அளித்தால், சுற்றுச் சூழல் மாசு ஏற்படும்’ என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி கூறியதாவது:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிரான கருத்தை கொண்டு உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நிபுணர்களும் இந்த விவகாரத்தை அறிவியல் ரீதியாக அணுகாமல், சித்தாந்த ரீதியாக அணுகுகின்றனர்.
இந்த விவகாரத்தில் வரைவு விதிமுறைகளை உருவாக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.
மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைப்படியே இது செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் விஷயத்தில் நாங்கள் பாராமுகமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விஷயத்தை நீதிமன்றம் சித்தாந்த ரீதியாக அணுகவில்லை. நம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கும், மேற்கத்திய நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கும் இடையே கல்வியறிவு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாயம் குறித்த விழிப்புணர்வு போன்ற விஷயங்களில் வித்தியாசம் உள்ளது.
தற்போதைய சூழலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு அத்தியாவசியமான காரணம் ஏதாவது உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.
சுற்றுச் சூழல் பாதிப்பு
இப்போது இதை அறிமுகம் செய்யாவிட்டால் விவசாயம் அழிந்து விடுமா என்பதையும் கேட்க விரும்புகிறோம்.
பாதுகாப்பு நடவடிக்கை, பரிசோதனை, ஆலோசனையை பெற்று, இதைப்பற்றி தெளிவாக புரிந்த பின் இதை அறிமுகம் செய்யலாமே? இப்போது இதை அறிமுகம் செய்தால் சரி செய்ய முடியாத அளவுக்கு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்