மீனவர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடுத்த வருடம் முதல் மின்சாரத்தில் இயங்கும்….

மீனவர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடுத்த வருடம் முதல் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் (29) நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிய அளவிலான மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பற்றரியில் பயன்படுத்தக் கூடிய 100 கிலோமீற்றர் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 86 ரூபா மாத்திரமே இதற்காக செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தும் படகுகளில் சூரியப்படலங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விசேட நடமாடும் சேவையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்ததுடன், இதன் மூலம் மீனவர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து டின் மீன்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அனுமதிப்பத்திரம் இல்லாத எவருக்கும் டின் மீன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்காக நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 2500 நன்னீர் தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

மேலும், தீவின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாந்த பண்டார, கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விஜித ஹேரத், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ திலீப் வேதஆராச்சி, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ (மேஜர் ) சுதர்சன் தெனிப்பிட்டிய, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ எம். டபிள்யூ. டி. சஹான் பிரதீப், கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.