மும்பை: மும்பை விமான நிலையத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணிகள் செக்-இன் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கணினி வழியாக செக்-இன் செய்ய முடியாமல் போனதால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இதனால், விமானங்கள் தாமதமாகின.
இந்தியாவில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குப் பிறகு, இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் 2-வது முனையத்தில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இணையதள சர்வரில் ஏற்பட்டக் கோளாறு காரணமாக விமானங்கள் புறப்படும் நேரம் தாமதமானது. பயணிகள் கையில் லக்கேஜுடன் 1 மணி நேரத்துக்கு மேலாக செக்-இன் பகுதியில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது குறித்து மும்பை விமான நிலைய நிர்வாகம் கூறுகையில், “நேற்று முனையம் 2-ல் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், கணினி வழியாக செக்-இன் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. கணினியின் உதவியில்லாமல் அதிகாரிகள் செக்-இன் பணிகளை மேற்கொண்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட இந்தச் சங்கடத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் சூழலைப் புரிந்து கொண்டதற்கு பயணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.