2023 வருடத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த அறிக்கையில்

2023 வருடத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த அறிக்கையில் முன்வைக்கப்படும்

  • பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

எதிர்வரும் வருடத்தில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களங்களின் பிரதிநிதிகள் அண்மையில் (30) உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டுவதற்கு மேற்படி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கான காரணங்கள் என்ன? இதற்கான காரணங்களில் 2019 டிசம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட்ட வரித் திருத்தங்கள் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் காணப்பட்ட வரிக் கோப்புக்களின் எண்ணிக்கை 14 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் வரை குறைவடைந்தமை மற்றும் இதனால் அரசாங்கத்துக்கு இழக்கப்பட்ட வரி வருமானம் குறித்தும் இங்கு கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ பதிவுகள் அற்ற கொடுப்பனவுகள் (வைத்தியர்களுக்கான கட்டணம், சட்டத்தரணிகள் கட்டணம், மேலதிக வகுப்புக் கட்டணங்கள்) காரணமாக அதிகளவு பணம் புழக்கத்தில் இருப்பதாகவும், இவற்றுக்காக வரியை அறவிடுவது தொடர்பில் உரிய பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர், உலக ஒருமைப்பாடு குறித்த வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய இந்நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளில் அதிக விலைகள் காண்பிக்கப்படுவது அல்லது குறைந்த விலைகள் காண்பிக்கப்படுவது போன்று விமானம் மூலம் அல்லது கப்பல்கள் மூலமும் நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான செல்வம் வெளிச்செல்வதாகக் கூறினார்.

மின்சாரப் பட்டியல், தொலைபேசிப் பட்டியல் மற்றும் வாகன உரிமைப் பத்திரம் போன்ற புறநிலைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வரி அறவிடும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் நாட்டில் எதனோல் அதிகமாகக் காணப்படுவதாகவும், இந்தத் தொகையை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தென்னங் கள்ளு மற்றும் கித்துல் கள்ளு ஆகியவற்றை கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தங்கம், பணம், கொடுப்பனவுகள், பாதுகாப்புக் கடன்கள், ஏற்றுமதி இறக்குமதி, சொத்துக்களைப் பரிமாற்றல் போன்ற துறைகள் குறித்த செயற்பாடுகளை நிர்வாகம் செய்வதற்கு அனுமதி வழங்கல் மற்றும் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு சட்டத்தை இரத்துச் செய்து இதற்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அன்னியச் செலாவணிச் சட்டத்தில் தங்கம் நீக்கப்பட்டமையால் தங்கம் நகைகளாக எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி இந்நாட்டுக்குள் கொண்டுவரப்படுவது பாரிய பிரச்சினையாகும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு வருவாயை வினைத்திறனான முறையில் வசூலிப்பதற்குத் திருத்தம் செய்ய வேண்டிய சட்டங்கள் குறித்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் வழங்குமாறு தலைவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.