Fact Check: மோர்பி பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகைக்கு ரூ.30 கோடி செலவா? – உண்மை என்ன?!

குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாலம் மாலையில் இடிந்து விழுந்ததால் இரவு முழுக்க மீட்புப்பணி நடந்தது. விபத்து அக்டோபர் 30-ம் தேதி நடந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நவம்பர் ஒன்றாம் தேதி மோர்பிக்கு சென்றார். பிரதமரின் வருகைக்காக அங்கிருந்த மருத்துவமனை பெயின்ட் அடிக்கப்பட்டு புதிய படுக்கைகள் வெளியூரில் இருந்து கொண்டு வந்து போடப்பட்டது.

வர்ணம் பூசப்படும் மோர்பி நகர் அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் உள்ள வாட்டர் கூலர் மெஷின் உட்பட கீழ் தளத்தில் இருந்த பெரும்பாலானவை மாற்றியமைக்கப்பட்டது. இது குறித்து அப்போதே கடும் விமர்சனம் எழுந்தது. மோடி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வந்த சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்கு குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதனை சகத் கோகலே என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், “விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள், தங்கியிருந்த மருத்துவமனைக்கு பெயின்ட் அடித்து, சுத்தப்படுத்தி, புதிய படுக்கை, வாட்டர் கூலர் வைக்க மட்டும் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

கோப்பு காட்சி

இது தவிர மோடி வருகிறார் என்றவுடன் இரவோடு இரவாக புதிய சாலை அமைக்க மட்டும் ரூ.11 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. மோடியை வரவேற்ற ரூ.3 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அதோடு பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு ரூ.2.5 கோடியும், அந்நிகழ்ச்சியை நடத்த 2 கோடியும், நிகழ்ச்சியை போட்டோ எடுக்க ரூ.50 லட்சமும் செலவிடப்பட்டிருக்கிறது.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் 5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த 135 பேருக்கு மொத்தமே 5 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு, நிகழ்ச்சி மேனேஜ்மெண்ட் மற்றும் போட்டோகிராபிக்கு மட்டுமே 5.5 கோடி செலவு செய்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கப்படும் 4 லட்சம் போதுமானது கிடையாது என்றும் இழப்பீட்டு தொகையை அதிகரித்து கொடுக்கும்படியும் குஜராத் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தநிலையில், PIBFactCheck தனது ட்விட்டரில் “ஆர்டிஐ (RTI)- ஐ மேற்கோள்காட்டி, ஒரு ட்வீட்டில் பிரதமரின் மோர்பி வருகைக்கு சில மணி நேரத்துக்கு ரூ.30 கோடி செலவானது என்று கூறப்பட்டது. அந்தக் கூற்று போலியானது. இது குறித்து RTI பதில் எதுவும் வழங்கவில்லை” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.