மகளிர் சுய உதவி குழு வசம் ரேஷன் கடைகள்| Dinamalar

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் புதிய திட்டம் தயாராகி வருகிறது.

நாடு முழுதும் தற்போது ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 38 நியாய விலை கடைகள் உள்ளன. இதில், இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 353 கடைகள் தனியார் ‘டீலர்’களால் நடத்தப்படுகின்றன.

கூட்டுறவு சங்கங்கள் அல்லது சிவில் சப்ளைஸ் வாரியங்கள் வாயிலாக, 82 ஆயிரத்து 517 கடைகள் நடத்தப்படுகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களால், 25 ஆயிரத்து 323 கடைகள் நடத்தப்படுகின்றன.

இறுதிகட்டப் பணிகள்

இந்நிலையில், பொது வினியோக முறையை மேலும் சிறப்பானதாக்குவது குறித்து மாநில உணவுத் துறை செயலர்களுடன், மத்திய உணவுத் துறை செயலர் ரஞ்ஜிவ் சோப்ரா சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துகளுக்கு மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், மத்திய அரசு மிகவும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல் கட்டமாக, தனியார் டீலர்களிடம் உள்ள கடைகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டம், ரேஷன் கடைகளை மேலும் வலுவானதாக்குவதோடு,
மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் நிதிநிலையை
அதிகரிக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இது, இறுதி
கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்த திட்டத்துக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இதை செயல்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்துக்காக தனியார் கடைகளுக்கு மத்திய அரசு கமிஷன் அளித்து வருகிறது.

இந்த கமிஷன் தொகை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துகளுக்கு கிடைத்தால், இவற்றின் நிதி நிலை மேம்படும் என்பது மத்திய அரசின் தரப்பில் கூறப்படும் காரணமாகும். மலை மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தனியார் டீலருக்கு, ஒரு குவின்டால் உணவுப் பொருளுக்கு, 143 ரூபாய் கமிஷனாக மத்திய அரசு வழங்குகிறது; மற்ற மாநிலங்களில், 90 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மிகச் சிறந்த சேவை, வெளிப்படை தன்மை, நிதி கண்காணிப்பு ஆகியவற்றை வைத்து, ரேஷன் கடைகள் வாயிலாக புதிய வருவாய் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்தே, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரேஷன் கடைகளை மாற்ற, மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகளை, பொது சேவை மையங்
களாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, விரைவில் ரேஷன் கடைகளில், பல்வேறு சமூக நல திட்டங்கள், கல்வி, வேளாண் சேவைகள், நிதி சேவைகள் வழங்கப்படும்.
இதற்காக, தற்போது நாடு முழுதும், 38 ஆயிரத்து 788 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்
பட்டுள்ளன. தமிழகத்தில், 1,480 கடைகள் தேர்வாகிஉள்ளன.

இந்த ரேஷன் கடைகளில், வழக்கமான ரேஷன் பொருட்களுடன், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளன. மிக விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.