ஆளுநர் ஒப்புதல் அளித்தும் அரசாணை வரல.. 8 உயிர்கள் பலி.. முதல்வரே பொறுப்பு – அண்ணாமலை

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுதிடக்கோரி ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டம் காலாவதியாக நவம்பர் 27 கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதனால், தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு சட்டம் இயற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் ஆர். என். ரவியை கடுமையாக சாடி வருகின்றனர். மேலும், ஆன்லைன் ரம்மியால் இன்னொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு ஆளுநரே காரணம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, ஆன்லைன் தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து பதில் கடிதம் எழுதி அவருக்கு அனுப்பியுள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது அவர்தான். அவரது முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்றார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் திமுக அரசு அரசாணை வெளியிடவில்லை என்றும் வேண்டுமென்றே ஆளுநர் மீது பழி போடுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் குறித்து இன்று அண்ணாமலை போட்டுள்ள ட்வீட்டில் மீண்டும் தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

அதில், அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரே பொறுப்பு என இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.