அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட தொடங்கியதில் இருந்து, கோவையைச் சேர்ந்த கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், ஓபிஎஸ் அணி சார்பில் பல்வேறு இடங்களில் பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஓபிஎஸ் தான் அதிமுகவின் எதிர்காலம், அதிமுகவை தலைமையேற்று நடத்தும் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் தொடர்ச்சியாக பேசி வந்தார். அதிமுக பலமாக இருக்கும் கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலமாக இருக்கும்போதும், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்பட்டு வந்தார் கோவை செல்வராஜ்.
ஆனால், அவர் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியை சாடியிருக்கும் அவர், இந்தமுறை ஓ.பன்னீர்செல்வத்தையும் சாடியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களின் சுயநலத்துக்காகவே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதாகவும், இதனால் அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை என தெரிவித்திருக்கும் அவர், உடனடியாக கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திடீரென ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன? என்பதை தோண்டி துருவி வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள். ஓபிஎஸ்ஸின் செயல்பாடும், அவரின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே கோவை செல்வராஜ் விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒரு விக்கெட் விழுந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி அணி உற்சாகத்தில் இருக்கிறது.