'சீன கப்பல்களை உன்னிப்பாக கவனிக்கிறோம்' – கடற்படை தலைமை தளபதி ஹரி குமார்

இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் கூறியதாவது:

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம்.

இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன. குறிப்பாக 4 முதல் 6 வரை சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில உளவு கப்பல்கள் இயங்குகின்றன. நாங்கள் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடல்சார் துறையில் இந்தியாவின் நலன்களைக் கவனிப்பதே எங்கள் வேலை. பாதுகாப்பை வழங்குவதே எந்தவொரு ஆயுதப்படையினரின் பணியாகும்.

இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது. சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்க முடியாது என்பதை காட்டுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு எங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. 2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம்.

இவ்வாறு கடற்படை தளபதி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.