புதுடில்லி,புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் உள்ள சர்வதேச படிப்புகளுக்கான கல்வி மையத்தின் சுவர்களில், பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தினருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
பேராசிரியர்கள் சிலரது அறைகளும் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, உலகப்புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், சர்வதேச படிப்புகளுக்கான கல்வி மையம் பிரத்யேகமாக செயல்படுகிறது. இந்த மையத்தின் கட்டடம் அமைந்துள்ள வளாக சுற்றுச்சுவரில், பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தினருக்கு எதிராக மிரட்டும் வகையில் கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
மேலும், இந்த வளாகத்தில் உள்ள சில பேராசிரியர்களின் அறைகளும் சூறையாடப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, துணை வேந்தரிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சர்வதேச படிப்புகளுக்கான மையத்தின் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ டி.பண்டிட் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த செயலை பல்கலை நிர்வாகம் வன்மையாக கண்டிக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலை அனைவருக்குமானது. இதுபோன்ற தனித்துவ போக்குடன் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில், இடதுசாரி ஆதரவு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் குற்றஞ்சாட்டி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement