மீனாட்சி கல்வி குழுமத்தின் தலைவரும், ‘தின இதழ்’ நாளிதழ் மற்றும் மீனாட்சி தொலைக்காட்சியின் நிறுவனருமான ஏ.என்.இராதாகிருஷ்னன் சென்னையில் இன்று (டிச.3ம் தேதி) காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடந்த 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி வழங்கப்பட்டது. இதன் வேந்தராக இருந்தவர் ஏ.என்.இராதாகிருஷ்ணன்.
அதோடு, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சென்னை மதுரவாயலில் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி, கே.கே.நகரில் மீனாட்சி பொறியியல் கல்லூரி, மாங்காட்டில் மீனாட்சி செவிலியர் கல்லூரி மற்றும் பொறியியல் மற்றும் தொழிநுட்பத் துறை, எம்.ஜி.ஆர் கேட்டரிங் கல்லூரி, ‘தின இதழ்’ நாளிதழ் மற்றும் மீனாட்சி தொலைக்காட்சியையும் ஏ.என்.இராதாகிருஷ்னன் திறம்பட நடத்தி வந்தார்.
இந்நிலையில், மீனாட்சி பல்கலைக்கழக வேந்தரும், மீனாட்சி கல்வி குழுமத்தின் தலைவருமான ஏ.என்.இராதாகிருஷ்ணன் இன்று (டிச.3-ம் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஏ.என்.இராதாகிருஷ்ணன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.