புதுடில்லி, நம் ராணுவத்தை மேலும் பலப்படுத்த அமெரிக்காவில் இருந்து அதிநவீன ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாங்க பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறியதாவது:
அமெரிக்காவின் ‘எம்.க்யூ.9பி ட்ரோன்’ என்ற அதிநவீன ஆளில்லா குட்டி விமானங்கள் இரண்டை நம் கடற்படை 2020ல் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது.
இதையடுத்து, நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க, இந்த அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 2,400 கோடி ரூபாய் செலவில் 30 ட்ரோன்கள் வாங்க பேச்சு நடந்து வருகிறது.
முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டு இருந்தாலும், எண்ணிக்கை குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த அதிநவீன ட்ரோன்கள் வாயிலாக எதிரிகளின் ட்ரோன்களை எளிதில் கண்டுபிடித்து வீழ்த்த முடியும். மேலும், பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளிப்பதுடன், ரகசியமாக சென்று தாக்குதல் நடத்தவும் முடியும்.
அதேநேரத்தில் நம் சுயசார்பு கொள்கையில் இருந்தும் விலகவில்லை.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்தாலும், 2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு திட்டத்தின் கீழ், நமக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் அதிநவீன தளவாடங்களை நாமே தயாரிப்பது என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement