இதுக்கும் என்னை கலாய்ப்பாங்க.. இருந்தாலும் சொல்றேன்.. ஆளுநர் ஆர்.என். ரவி வந்து…

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே அதிகார மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியும், சில மசோதாக்களை கிடப்பில் போட்டு விடுவதாகவும் ஆளுநர் மீது குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையொப்பம் வழங்கவில்லை என்றும் அதனால் அச்சட்டம் காலாவதியாகிவிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பது.

இதுகுறித்து தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியது; ஒரு ஆளுநருக்கு மசோதா வந்தால் உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்பது கிடையாது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆலோசனை செய்வதற்கான நேரம் எடுத்துக் கொள்கின்றனர். ஆளுநர் என்றால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனடியாக மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்பது இல்லை. இதை காலதாமதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.

இதனை அடுத்து தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்து ஆளுநர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெறுவது என்று கேட்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது கருத்து. இந்த கருத்திற்கு சமூக வலைதளத்தில் எனக்கு இப்போது விமர்சனம் வரும்.

ஒரு ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவரை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கக் முடியாது. இது ஜனநாயக நாடு. இதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் அப்போது கூறியபோது, என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. சில விபரங்களை கேட்டு இருக்கின்றோம்.

தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றோம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்துவிட்டுதான் கையெழுத்திட வேண்டும். இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட, கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும் என தமிழிசை இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பிரச்சினை குறித்து தெலுங்கானா ஆளுநர் இரண்டு முறை கருது தெரிவித்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மவுனமாக இருந்து வருவது பல விமர்சனகளுக்கு அடித்தளமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.