அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தனித்துவிடப்படுவார் எனக் கூறியுள்ளார். மேலும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் அதிமுகவில் இணைவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், ” அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேருவோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் இருப்பார்கள். ஒன்று சேர எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை என்றால் எடப்பாடி தனித்து விடப்படுவார்.அது கூடிய விரைவில் நடக்கும்
எங்களுடைய பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் ஏற்கனவே வந்ததுதான். தற்போது புதிதாக ஒன்றும் வரவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் அதிமுக சந்திக்கும். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பார். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
ஆறுமுகசாமி அறிக்கையில் ஒரு சில கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது. தமிழக அரசு அந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது? என்பது குறித்து அறிந்து அதன் பின்னர் கருத்துக்களை நாங்கள் வெளியிடுவோம். எய்ம்ஸ் மருத்துவமனையைவிட சிறந்த மருத்துவர்கள் நமது நாட்டில் யாரும் கிடையாது. அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஆறுமுகம்சாமி அறிக்கை முற்றிலும் பொய் என்று நாங்கள் கூறவில்லை. அந்த அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவை செல்வராஜ் எதற்காக தன்னை கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. மீண்டும் அவரை ஒன்றிணைப்பதற்கு பேச்சுவார்த்தை தொடரும். எடப்பாடி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்தப்பட்ட சோதனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர இதுவரை சார்ஜ் சீட் பதிவு செய்யப்படவில்லை. எனவே திமுகவின் பி டீம் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கவர்னருக்கு என்று சட்ட திட்டம் என்ன உள்ளதோ? அதுபடி தான் கவர்னர் நடந்து வருகிறார். அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஓபிஎஸ் அணியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.