எருமேலி, புல்மேடு பாதைகளில் 15 ஆயிரம் பேர் பயணம்| Dinamalar

சபரிமலை: சபரிமலைக்கு, எருமேலி மற்றும் புல்மேடு பாதைகளில் நேற்று முன்தினம் வரை, 15 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்து வந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பனை தரிசிக்க, இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, சபரிமலைக்கான அனைத்து பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

இவற்றில், எருமேலியில் இருந்து துவங்கும் பெருவழி பாதையான கோயிக்காவு, அழுதை, முக்குழி வழியாக, நேற்று முன்தினம் வரை, 11 ஆயிரத்து 400 பக்தர்கள் வந்துள்ளனர்.
இந்த பாதையில் கோயிக்காவு ‘செக்போஸ்டில்’ காலை 7:00 மணி முதல், மாலை 4:00 வரை
யிலும், அழுதையில் காலை 7:00 மணி முதல், பகல் 2:30 வரையிலும், முக்குழியில் காலை 7:00 மணி முதல், மாலை 3:30 வரையிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்குப் பின் வரும் பக்தர்கள் தொடர்ந்து செல்ல அனுமதி கிடையாது. அடுத்த நாள் காலையில் தான் சபரிமலைக்கு புறப்பட வேண்டும். இதுபோல குமுளி, சத்திரம், புல்மேடு பாதையில், நேற்று முன்தினம் வரை, 3,600 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். சத்திரம் செக்போஸ்டில் காலை 7:00 மணி முதல், பகல் 2:00 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம், 74 ஆயிரத்து 703 பேர் முன்பதிவு செய்து, 73 ஆயிரத்து 297 பேர் தரிசனம் செய்தனர். நேற்று 71 ஆயிரத்து 515 பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர்.

பசியோடு வரும் பக்தர்களுக்கு சபரிமலையில் அன்னதானம்

சபரிமலையில், மாளிகைப்புறம் கோவிலுக்கு பின்புறம் பிரமாண்டமான அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் உணவு சமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 3,500 பேர் அமர்ந்து சாப்பிட வசதி உள்ளது.

காலை 6:30 முதல் 11:00 மணி வரை உப்புமா, சுண்டல்கடலை குருமா, சுக்கு காபி வழங்கப்படும். பகல் 12:00 முதல், மாலை 3:30 மணி வரை புலாவ், சாலட், ஊறுகாய் வழங்கப்படும்.

மாலை 6:30 முதல், இரவு 11:15 மணி வரை கஞ்சி, பயிறு வழங்கப்படுகிறது. பாத்திரங்கள் கழுவ ‘எலக்ட்ரிக் டிஷ்வாஷ்’ வசதி செய்யப்பட்டுள்ளது; 230 பணியாளர்கள் உள்ளனர். தினமும், 22 ஆயிரம் பேர் வரை அன்னதானம் உண்கின்றனர். நடை திறந்த பின், 16 நாட்களில் நான்கு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிட்டுள்ளனர்.

சபரிமலையில் அன்னதானம் செய்வது சிறப்பு என்பதால், இந்த திட்டத்துக்கு பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர். நேற்று முன்தினம் வரை 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக கிடைத்து உள்ளது. ‘இந்த மண்டபத்தில் தங்கள் பெயரில்
அன்னதானம் செய்ய விரும்பினால், சம்பந்தப்பட்டவர்கள் ஒரு வேளைக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்’ என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.