சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தைக்கு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தினமும் 80 டன் முருங்கைக்காய் வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 3 டன்னாக வரத்து குறைந்துள்ளது. அதேபோன்று நெல்லை ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வரும் சாம்பல் நிற முருங்கையின் வரத்து 3 டன்னில் இருந்து ஒரு டன்னாக குறைந்துள்ளது.
தற்பொழுது முருங்கைக்காயின் சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தற்பொழுது கல்யாண சீசன் தொடங்கியுள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கிலோ 80 ரூபாய் விற்கப்பட்ட முருங்கைக்காய் விலை நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் முருங்கைக்காயின் விலை மேலும் அதிகரித்து இன்று ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. வரும் தை மாதம் முடியும் வரை முருங்கைக்காய் தட்டுப்பாடு இருக்கும் எனவும் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.