சீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து துவங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன சீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் துவங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது.

எட்டு கிமீ நீளம், 30அடி அகலம் கொண்ட இந்த கால்வாயில் கடந்த 2000ல் ரூ.48 லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கழுங்கு வரை சுமார் ஒரு கிமீ தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மழைநீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமெண்ட் கால்வாயாக அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில், இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணி நடந்தது. கருத்துரு தயார் செய்து, ரூ.21.96கோடிக்கு திட்ட மதிப்பீடும் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து 2018ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.22 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த ஜூனில் சீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.