சென்னையில் யாசகம் எடுக்க பயன்படுத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்பு

சென்னை: சென்னையில் யாசகம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்கள் 8 குழந்தைகள் பெற்றோரிடமும், 7 குழந்தைகள் காப்பகத்திலும். ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னையில் குழந்தைகளை யாசகம் எடுக்க பயன்படுத்தும் நபர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில், நந்தனம் சிக்னல், வடபழனி, வேளச்சேரி, அடையார் ஆகிய பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை காவல் குழுவினர் நேற்று (நவ.3) (Anti Begging Special Drive) சிறப்புத்தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த சிறப்புத்தணிக்கையில் காவல் குழுவினர் மைலாப்பூர் பகுதியில் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 4 குழந்தைகள், தி.நகர் பகுதியில் 3 குழந்தைகள், கோயம்பேடு பகுதியில் 5 குழந்தைகள், நந்தனம் பகுதியில் 2 குழந்தைகள், வேளச்சேரி பகுதியில் 1 குழந்தை என மொத்தம் 15 குழந்தைகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட 15 குழந்தைகளும், கெல்லீஸ், குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். குழந்தைகளிடம் விசாரணை செய்து, 8 குழந்தைகளின் பெற்றோர்களை கண்டறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 7 குழந்தைகள் கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்திலும், குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்திய 4 பெண்கள் சென்னை, மயிலாப்பூரில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.