இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே ‘வணங்கான்” திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாலா விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை தமிழில் இயக்கி முடித்தார். ஆனால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து பாலாவின் ரசிகர்கள் அனைவரும் அவர் எப்படியாவது மீண்டும் எழுந்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் உருவாகின. அந்த பிரச்னையிலிருந்து பாலா மீண்டு விட வேண்டுமென்று பலர் நினைத்துக்கொண்டிருந்தபோது சூர்யாவும், பாலாவும் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இருவரும் இணையும் படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டு சூர்யா பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எனவே இந்தப் படத்தின் மூலம் பாலா எனும் மகத்தான படைப்பாளி மீண்டு எழுந்துவிடுவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வணங்கான் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
தற்போது வணங்கானிலிருந்து சூர்யா விலகியிருப்பதாக பாலாவே அறிவித்திருப்பதன் மூலம் அது உறுதியாகிவிட்டது. இது பாலாவுக்கு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது. அவர் இதுபோன்ற போராட்டத்தை சேது படத்திலேயே பார்த்தவர். எனவே அவர் இதையெல்லாம் கடந்து வணங்கானை எடுத்து முடித்து தன்னை மீண்டும் மீட்க வேண்டும் என்பதே தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.