தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து வலுத்துள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக காம் நகரில் ஈரான் நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது ஜஃபார் மோன்டாசெரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த புதன் கிழமையன்று ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற கலாச்சார குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது ஒன்றிரண்டு வாரங்களில் அதன் முடிவு தெரியவரும் என்றார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் விளையாட கத்தார் சென்ற ஈரான் அணியினர் தங்கள் நாட்டில் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக தேசிய கீதம் பாடுவதை புறக்கணித்தனர். இந்நிலையில் தான் ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.