ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்த அவர் காக்கா முட்டை மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து அவர் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கினார். இந்தப் படத்தி விஜய் சேதுபதியுடன் யோகிபாபுவும் நடித்திருந்தார். வறுமையின் காரணமாக வெளிநாடு செல்ல ஏங்கும் இளைஞர்களின் வாழ்வியலை பதிவு செய்திருந்தது இப்படம். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறும்பட காலத்திலேயே நண்பர்களாக இருந்த விஜய் சேதுபதியும், மணிகண்டனும் ஆண்டவன் கட்டளையின் மூலம் மேலும் நெருக்கமானார்கள்.
இதனையடுத்து மீண்டும் மணி இயக்கத்தில் விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து படத்தை தயாரிக்கவும் செய்தார். படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் மணிகண்டனை தூக்கி வைத்து கொண்டாடினர். மிஷ்கின் நேரடியாக மணிகண்டன் வீட்டுக்கு சென்று மாலை போட்டு கௌரவித்தார்..
இந்நிலையில், மணிகண்டனுடன் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இணையவிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைவது தொடர்பாக பல முறை சொல்லப்பட்டாலும், அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் இருவரும் மூன்றாவது முறையாக இணையவிருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால் இம்முறை திரைப்படமாக இல்லாமல், வெப் சீரிஸ் ஒன்றிற்காக இணையவிருப்பதாக விஜய் சேதுபதி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முதல்முறையாக வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதால் அதனை காண்பதற்கு ஆவலோடு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். விஜய் சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.