வெற்றிக்கு மூன்று வழிகள் சொன்ன ஆளுநர் தமிழிசை!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா,நாடார் வாலிபர் சங்க 33வது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் கருணாகரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பனை மரங்களால் செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆர்வமுடன் கண்டு ரசித்த ஆளுநர் தமிழை செளந்தரராஜன், திடீரென ஆர்வமுடன் குழந்தையாக மாறி நுங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.மேலும் அலங்கார பொருட்களையும் அவர் கண்டு களித்தார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ‘தங்களின் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஆனால் காவல் துறைக்கு தான் ஆளுநர் என்பதால் கெடு பிடிகள் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் மன்னித்து கொள்ள வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘காமராஜர் வழியை பின்பற்றியதால் இந்த இடத்தை பெற்றுள்ளதாகவும், வெற்றிக்கு மூன்று ரகசியம் உள்ளதாகவும் அவை மூன்றும் உழைப்பு, உழைப்பு உழைப்பு’ என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை , ‘ஒரு ஆளுநருக்கு மசோதா வந்தால் உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்பது கிடையாது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆலோசனை செய்வதற்கான நேரம் எடுத்துக் கொள்கின்றனர். ஆளுநர் என்றால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனடியாக மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்பது இல்லை. இதை காலதாமதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது’ என்றார்.

இதனை அடுத்து தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்து ஆளுநர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, டஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெறுவது என்று கேட்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது கருத்து. இந்த கருத்திற்கு சமூக வலைதளத்தில் எனக்கு இப்போது விமர்சனம் வரும்’ என்று பதலளித்தார்.

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று முழங்கி வந்த தமிழிசை சௌந்தரராஜன், தான் சொன்னதை போன்றே தமிழ்நாட்டில் பாஜக காலுன்றுவதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாக பணியாற்றினார். அவரின் சீரிய விடாமுயற்சியின் பயனாக தமிழ்நாட்டில் இன்று தாமரை மலர்ந்துள்ளது. இதற்கு பிரதிபலனாக தமிழிசைக்கு தெலங்கானா மாநில ஆளுநர் பதவியை மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.