இரானில் 1983-ம் ஆண்டிலிருந்து ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. பெண்கள் தங்கள் கண்களைத் தவிர்த்து தலை மற்றும் உடலை மறைக்க கறுப்பு நிற ஹிஜாப்புகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை , ‘மொராலிட்டி போலீஸ்’ எனப்படும் அறநெறி காவல் அதிகாரிகள் பெண்களை கைதுசெய்வதற்கு முன்பு எச்சரிக்கை வழங்குவது அப்போதைய வழக்கத்தில் இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆட்சிக்காலத்தில், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பல வண்ணங்களில் முக்காடுகள் அணிவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவரது மகனும் இரானின் தற்போதைய ஜனாதிபதியுமான இப்ராஹிம் ரைசி, “இரான் மற்றும் இஸ்லாம் மதத்தின் எதிரிகள் சமூகத்தின் கலாசாரம் மற்றும் மதக் கலாசாரத்தை குறிவைக்கிறார்கள்”

என்று குற்றஞ்சாட்டிய அவர், “அரசு நிறுவனங்களில் பெண்கள் முக்காடு அணிந்து வருவதை கட்டாயமாக்க வேண்டும்” என்று சட்டத்தை அமல்படுத்த எல்லா நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இரானைச் சேர்ந்த குர்திஷ் வம்சாவளியான மஹ்சா அமினி என்னும் 22 வயது பெண், இரானின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக அறநெறி காவல்துறையால் தெஹ்ரானில் கைதுசெய்யப்பட்டார். காவல்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து இரானின் பல பகுதிகளில், குறிப்பாக தெஹ்ரானில் போராட்டங்கள் வெடித்தன. சமூக ஆர்வலர்கள், பெண்கள் வீதிக்கு வந்து போராடினர். இரானிய பெண்கள் பலர் ஹிஜாபை பொதுவெளியில் எரித்தும், நீளமான தலை முடியை வெட்டியும், அரசுக்கு எதிராகப் பல கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இரானில் நடிகர்கள், கால்பந்தாட்ட வீரர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் எதிர்ப்பைத் தெரிவித்ததற்காக கைதுசெய்யப்பட்டனர். பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள், ஆர்வலர்கள் இரானின் போராட்டக்காரர்களுக்கு ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (28-11-22) இரானிய ஜெனரல் ஒருவர், “போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஒஸ்லோவை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான இரான் மனித உரிமைகள், “தற்போது நாடு தழுவிய போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது 448 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று கடந்த செவ்வாய்க்கிழமை (29-11-22) கூறியுள்ளது.
இரானில் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், இரானின் முன்னாள் சீர்த்திருத்தவாதியும் ஜனாதிபதியுமான முகமது கடாமியின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் முக்கிய சீர்திருத்தக் கட்சியான யூனியன் ஆஃப் இஸ்லாமிக் இரான் என்னும் மக்கள் கட்சி, “கட்டாய ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்யவதற்கு வழி வகுக்கும் வகையில் சட்டத்தை தயார் செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.
அதோடு கடந்த சனிக்கிழமை (3-12-22) அன்று, “அறநெறி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ” என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி சனிக்கிழமையன்று (3-12-22) ISNA எனும் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அறநெறி காவல்துறையினரின் இத்தகைய கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டது. அறநெறி காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.