22 வது கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடத்தப்படும் ஒட்டக அழகுப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போட்டி கத்தாரில் உள்ள ஆஷ்-ஷஹானியா என்ற பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கத்தார் ஒட்டகம் ஜாயென் கிளப் தலைவர் ஹமத் ஜாபர் அல்-ஆத்பா கூறும்போது, “உலகக்கோப்பை கால்பந்து போட்டி போன்று, நாங்கள் ‘ஒட்டக அழகு உலகக் கோப்பை’ போட்டியை நடத்தி வருகிறோம்.
வளைகுடா நாடுகளில் உள்ள ஒட்டகங்கள் இதில் கலந்துகொள்கின்றன. இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஒட்டகங்கள், அவற்றின் வயது மற்றும் இனம் அடிப்படையில் பிரிக்கப்படும். இதில் கருப்பு ஒட்டகங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் உடல் அளவு, தலை மற்றும் காதுகள் அமைந்த பகுதிகள் எல்லாம் சரியாக உள்ளதா என பார்க்கப்படும்.

இதுவே மகாதீர் வகை ஒட்டகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றின் காதுகள் கீழ் நோக்கி இருக்க வேண்டும் அதன் வாயும் வளைந்து இருக்க வேண்டும். அதே போல் ஆசெல் ஒட்டகங்களுக்கு எலும்புகள் மிக மென்மையாக இருக்க வேண்டும் என்று போட்டியில் கலந்துகொள்ளும் ஒட்டகங்களுக்கு இருக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். மேலும் ஒட்டகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் அழகை மெருகேற்றி, மோசடி நடைபெறாமல் தடுக்க மருத்துவக் குழு மூலம் எக்ஸ்ரே எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது கத்தாரில் நடக்கும் இந்த ஒட்டக உலகக்கோப்பையை ஏராளமானோர் கண்டு கழித்து வருகின்றனர்.