நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இயகுநர் பாலா, “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

‘பிதாமகன்’, ‘நந்தா’ போன்ற மற்றொரு வெற்றித் திரைப்படத்தை இவர்கள் இருவரின் கூட்டணியில் எதிர்பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களிடையே இந்த திடீர் அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டைமண்ட் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில்,”பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் ‘2DEntertainment ‘ நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளது.