திமுகவை வழிநடத்துவது அதிமுவின் அந்த 8 பேர் தான்; போட்டு தாக்கும் ஜெயக்குமார்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், ” எம்ஜிஆர் , ஜெயலலிதா இருவரும் அழிவில்லாத வாழ்வை பெற்றவர்கள். அதிமுகவில் எந்த பிரிவும் , பிளவும்  இல்லை. கட்சி விரோத நடவடிக்கையால்  ஓபிஎஸ் மற்றும் அவர்  சார்ந்த சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.  

62 எம்எல்ஏக்கள் , 75 தலைமைக கழக நிர்வாகிகள் , அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதிமுகவில்தான் இருக்கின்றனர். கடலில் கொஞ்சம் நீர் எடுத்தால் அந்த சமுத்திரம் வற்றி விடாது , சமுத்திரம் போன்றது அதிமுக. ஓபிஎஸ் உள்ளிட்டோர் அணிகள் அல்ல, அவர்கள் பிணிகள். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனும் அடிப்படையில் g20 தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

சட்டப்படியான விசயம்தான் இது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக  பொதுக்குழு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். G20 கூட்டம் மத்திய அரசு கூட்டியது. பாஜக கூட்டியுள்ள கூட்டம் அல்ல. கட்சியும் , ஆட்சியும் வேறு வேறு. டெல்லியில் நடப்பது அனைத்து கட்சி கூட்டம் இல்லை. பாஜக ஒரு  தேசிய கட்சி  அவர்களுக்கென சித்தாந்தம் , கொள்கை இருக்கிறது. எங்களது சித்தாந்தம் கொள்கை வேறு. இரு கட்சியினரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கிறோம். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஈபிஎஸ் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். 

டிடிவியுடன் இணைப்பு, கூட்டணி கிடையாது. திமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை எனும்  உளக்குமுறல் நீர் பூத்த நெருப்பாக அவர்களுக்குள் புகைகிறது. அது தொடர்பாக பேசி ஆர்.எஸ்.பாரதி் முதல் பூனைக்குட்டியாக வெளிவந்துள்ளார். ஸ்டாலினுக்கு கட்சி ஆட்சி குறித்து கவலை கிடையாது . பையனுக்கு மூடி சூட வேண்டும் என்ற கவலை மட்டுமே உள்ளது . திமுகவை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை, அதிமுகவில் இருந்து  திமுகவிற்கு சென்ற 8 பேர்தான் திமுகவை ஆட்சி செய்கின்றனர். சேகர்பாபு போன்ற சில  பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதலமைச்சரே கூறுகிறார். 

முதலமைச்சர் குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தயாநிதி மாறனுக்கு ஏன் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கவில்லை. அவரை வெறும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளராக அறிவித்துள்ளனர். முரசொலி மாறன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர்” என சாடினார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.