வெகுஜன படுகொலைகள்… இந்தியாவுக்கு எந்த இடம்? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு!

வெகுஜன படுகொலைகளை சந்திக்கும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க சிந்தனைக் குழுவின் முன் எச்சரிக்கை திட்டம் (Early Warning Project – EWP) வெளியிட்டுள்ளது. EWP மதிப்பீட்டின்படி, வெகுஜன படுகொலைகளை சந்திக்கும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. EWPஇன் 28 பக்க அறிக்கையில் பாகிஸ்தான் பல்வேறு ‘பாதுகாப்பு மற்றும் மனித உரிமை சவால்களை’ எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மற்ற ஆசிய நாடுகளான ஏமன் மற்றும் மியான்மர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு 7ஆவது இடமும், இந்தியாவுக்கு 8ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னணியில் இந்தியா

சுவாரஸ்யமாக, சிரியா, ஈராக், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை விட வெகுஜன படுகொலைகளை சந்திக்கும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சிரியா மற்றும் ஈராக் ஆகியவை முறையே 11 மற்றும் 12ஆவது இடங்களிலும், சீனா 23 ஆவது இடத்திலும், ஈரான் 30 ஆவது இடத்திலும் உள்ளன.

‘முதல் 30 இடங்களுக்குள் உள்ள நாடுகள் அதிக ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்’ என EWP திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

வெகுஜன கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நாடுகள் சிறப்பு குறியீட்டினால் குறிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா, மியான்மர், சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகள் வெகுஜன கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நாடுகளாக சிறப்பு குறியீட்டினால் குறிக்கப்பட்டுள்ளன.

சீனா, ஈரானுக்கு இடமில்லை

ஆனால், சீனா, ஈரான் ஆகியவை வெகுஜன கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நாடுகளாகக் குறிக்கப்படவில்லை. சீனா, ஈரான் ஆகிய நாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான போரட்டங்கள் கொந்தளிப்பாக பெருமளவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த நாடுகள் வெகுஜன கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நாடுகளாக சிறப்பு குறியீட்டினுள் குறிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

சீன அரசின் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கைகளால் அந்நாட்டுல் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதேபோல், ஹிஜாப் அணிவது தொடர்பாக ஈரானிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் ஈரானின் ஒழுக்கவியல் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் உயிரிழந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

முன் எச்சரிக்கை திட்டம் (Early Warning Project – EWP) என்றால் என்ன?

முன் எச்சரிக்கை திட்டம் (EWP) என்பது வெகுஜன படுகொலைகள் அபாயத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காணும் ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும். பரவலாகக் கிடைக்கும் தரவுகளின் வரம்பைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பெருமளவில் நடக்கும் அட்டூழியங்களின் அபாயத்தை முன்கூட்டிய எச்சரிக்கைத் திட்டமானது மதிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.