டாக்கா,
இந்தியா – வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் சரியாக இல்லாததால் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது,
இது இந்திய அணியின் ஆட்டம்,இந்திய அணி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்தது, பேட்ன்மேன்கள் செய்த தவறுக்கு பின்னர் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை நம் பக்கம் கொண்டு வந்தனர். 40 வது ஓவர் வரை இந்திய அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் அவ்வாறு இல்லை, இந்திய அணியின் இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர் யார்? தீபக் சஹாரா அல்லது குல்தீப் சென்னா?.
நாம் கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம். கேஎல் ராகுல் இதை அடிக்கடி செய்வதில்லை. அவர் ஒரு அற்புதமான பீல்டர். டி20 உலக கோப்பையில் லிட்டன் தாசை அவர் அருமையாக ரன் அவுட் செய்தார். கேட்ச் பிடிக்க சுந்தர் டைவ் அடிக்கவில்லை என்றார்.
மேலும், இந்திய அணியில் பீல்டர்கள் மிகுந்த அழுத்தமாக காணப்பட்டனர். அவர்கள் அதனால் தான் தவறுகள் இழைத்தனர். நாம் வைடு மற்றும் நோ பால்களை வீசினோம். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அழுத்தத்தை சமாளிக்க வேண்டும்.
அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் நாம் தோல்வி அடைகிறோம் எனபதை பார்க்கும் போது நான் மிகவும் ஏமாற்றம் அடைகிறேன். நீங்கள் கேப்டன்சி மற்றும் பந்துவீச்சு மாற்றத்தை பற்றி பேசலாம். இந்த ஆட்டம் 40வது ஓவர் வரை நமது கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் எப்படி ஆட வேண்டும் காண்பித்தனர். ஆனால் கடைசி 10 ஓவர்களில் இளம் பந்துவீச்சாளர்களால் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை என்று நான் உணர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.