சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, “எதிரிகளை வென்று வீறுநடை போட நாம் ஒன்றாக வேண்டும்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார். அதில், “ஜெயலலிதாவின் நினைவு நாளில் தமிழக மக்களின் நலனுக்காகவும், நமது இயக்கத்தின் வளர்ச்சிக்காவும், தொண்டர்களின் உயர்வுக்காவும் ஒன்றிணைவோம்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆற்றிய அரும்பணிகளை என்நாளும் நினைவில் கொண்டு கடமை உணர்வோடு, பணியாற்ற உளமார உறுதி ஏற்போம். நமது தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பயணித்திட உறுதி ஏற்போம்.
ஒரு தொண்டர் கூட விலகி நிற்காமல், ஓர் அணியில் நின்று, ஒற்றுமையோடு இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வென்று வீறுநடை போட நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும். கரம் கோர்ப்போம், உறுதி ஏற்போம்” என்று சசிகலா உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.