சென்னை: கட்டிடம், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெற வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற வீட்டு வசதித்துறை அமைச்சரின் கடிதத்தை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, துறையின் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் பல கட்டிடங்கள் வரைபட அனுமதி பெறாமல் மிக நீண்டகாலமாக உள்ளன. காரணம், அந்த நேரத்தில் அதற்கான புரிதல் இல்லை. அதன்பின் வரன்முறை திட்டம் வந்தபோதுகூட அதைப்பற்றி பெரிய அளவில் மக்களுக்கு தெரியவில்லை. தற்போதுகூட பொதுமக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை மிக பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்க வேண்டியுள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனங்களின் சங்கங்கள், பொறியாளர்களின் சங்கங்கள், கட்டிட வடிவமைப்பாளர் சங்கங்கள் போன்ற கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி, கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வழிவகை செய்யலாம்.
மேலும், அவர்கள் தொடர்ந்து பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இவற்றை விவாதித்து நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம்.
அனுமதியின்றி பல கட்டிடங்கள் மிக நீண்ட காலமாக உள்ளதால் அதற்கு தற்போதுள்ள விதிகள்படி தீர்வை ஏற்படுத்த முடியாது. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் அந்த வகையிலேயே உள்ளன.
எனவே, இது தொடர்பான உண்மை நிலையை அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து ஒரு தீர்வை பெற முயற்சிக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் மறு வரையறை செய்ய ஒரே ஒரு வாய்ப்பைபெற்றுவிட்டால், முழு தீர்வையும்கண்டுவிட முடியும். அந்த வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் ஒவ்வொருவரும் அறியும் வகையில் அரசு சார்பில் செய்தியை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அபராத தொகை என்பதை மிக குறைவாக நிர்ணயித்து அனைவரும் பங்கேற்கவழிவகை செய்ய வேண்டும்.
இனிமேல் மாநிலம் முழுவதும்வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கும் என்றஉத்தரவாதத்தை உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கலாம். எனவே, இவை சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு தெளிவான கருத்துரையை எடுத்துச் செல்லும் வகையில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் நம் கோரிக்கை மேலும் வலுப்பெறும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து, வீட்டுவசதி செயலர் அறிவுறுத்தல்படி, நகர ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், கட்டிடம், மனைப்பிரிவு அனுமதியின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி இரு அமைப்புகளின் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.