திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் நாளை மாலை6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படஉள்ளது.
“ஞான தபோதனரை வாவென்றழைக்கும்” திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவ.24-ல் தொடங்கியது.
அதன்பிறகு, நவ.27-ல் மூலவர் சன்னதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. வெள்ளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள், மாட வீதியில் வலம் வருகின்றனர்.
7-ம் நாளான நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர்தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நாளை (நவ.6) ஏற்றப்படவுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
ஏகன்-அநேகன்: ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தின் அடிப்படையில் பஞ்சபூதங்களும் நானே என்பதை அண்ணாமலையார் உணர்த்துகிறார். பின்னர், அண்ணாமலையார் கோயில் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்
11 நாட்கள் தீப தரிசனம்: இதைத்தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள், சிறப்புஅலங்காரத்தில் மகா தீப தரிசனமண்டபத்தில் தங்க விமானங்களில் எழுந்தருளியதும், உமையவளுக்கு இடபாகத்தை அளித்து ‘ஆண்-பெண்’ சமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் மாலை 5.55 மணியளவில் காட்சி கொடுக்க உள்ளார்.
அதன்பிறகு தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீப சுடர் ஏற்றியதும், 2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.
‘மோட்ச தீபம்’ என அழைக்கப்படும் மகா தீபத்தை பருவதராஜ குல வம்சத்தினர் ஏற்றி வைக்கஉள்ளனர். அப்போது ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சிகொடுக்க உள்ளதால், மூலவர்சன்னதியின் நடை அடைக்கப்படஉள்ளன.
மகா தீப தரிசனத்தை 11 நாட்கள் காணலாம். இதற்காக, 1,000 மீட்டர் காடா துணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தங்கரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நாளை இரவு நடைபெறும். மலை மீது ஏறி சென்றுதீபத்தை தரிசிக்க 2,500 பேருக்குமட்டும் அனுமதி வழங்கப்படவுள்ளன. மகா தீபம் ஏற்றப்பட்டதும், அண்ணாமலையாரை குளிர்விக்கும் வகையில் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ளன.
2 நாட்களுக்கு கிரிவலம்: கார்த்திகை தீபத் திருவிழாவை (6-ம் தேதி) தொடர்ந்து, பவுர்ணமியும் (7-ம் தேதி) வருவதால் 2நாட்களுக்கும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம்வருவர் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.