அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2.51 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
26,409 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் நடைபெறும் 14 மாவட்டங்களில் 84 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பாரதி, “மொத்தமுள்ள 26,409 வாக்குச்சாவடிகளில் 93 வாக்குச்சாவடிகள் மாடல் சாவடிகள், 93 சூழல் நட்பு வாக்குச்சாவடிகள், 93 சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் இயக்கப்படுகிறது இவைதவிர 14 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் வசம் உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் 13,319 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு வெப்காஸ்ட் செய்யப்படுகிறது. மொத்தம் 2,51,58,730 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 1,29,26,501 பேர் பெண்கள். 1,22,31,335 பேர் ஆண்கள். 894 பேர் மூன்றாம் பாலினத்தவராவர்” என்றார்.
பிரதமர், அமித் ஷா வாக்களிக்கின்றனர்: இன்று அகமதாபாத், காந்திநகர், மேஷானா, பதான், பானாஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவல்லி, மஹீஸ்நகர், பஞ்சமஹால், தாஹோத், ஆனந்த், கேதா, சோட்டா உதய்பூர் போன்ற மாவட்டங்கள் தேர்தலை சந்திக்கின்றன. இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தக்கோர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் வாக்களிக்கின்றனர்.